ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கிராமிய நடன, இசைக்கலைஞர்கள்
ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால், கிராமிய நடன, இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஆதனக்கோட்டை,
ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால், கிராமிய நடன, இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
கிராமிய கலைஞர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கிராமிய நாட்டுப்புற ஆடல், பாடல் இசை கலைஞர்கள் 30-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் கிராமிய ஆடல், பாடல், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். குறிப்பாக பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் ஏராளமான கோவில் திருவிழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால், அதிகமாக கச்சேரிகள் பதிவு செய்யப்பட்டு மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அவர்கள் சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்திவிட்டு திரும்புவார்கள்.
இந்த 3 மாதங்களில் சராசரியாக 70 முதல் 90 கச்சேரிகள் வரை நடத்த அவர்களுக்கு ஆர்டர்கள் வரும். ஒவ்வொரு கச்சேரிக்கும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பேசி நிகழ்ச்சி நடத்துவார்கள். ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளும் குறைந்தது 15 ஆண் மற்றும் 5 பெண் இசை நடன கலைஞர்களை கொண்டு நடத்தப்படும். இந்த கலை நிகழ்ச்சியில் தவில், நாதஸ்வரம், பம்பை, உருமி, ஆர்மோனியம், தபேலா, தாளம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு பாடகர், நடனக்கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும் படியாக நடிப்புத் திறமையை வெளிக்காட்டுவார்கள். மேலும் கருப்பசாமி பாடல், காளியாட்டம் போன்றவற்றை தத்ரூபமாக நடித்து காண்பித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.
3 மாத வருமானத்தை நம்பி...
கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு அவரவர் கலைத்திறமைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவார்கள். இந்த கலை நிகழ்ச்சியில் பங்குபெறும் பெரும்பாலானோர் பட்டதாரிகளாக இருந்தாலும் கலையில் அதிக ஈடுபாடு கொண்டதால் வேறு எந்த தொழிலுக்கும் செல்லாமல் கலைத்தொழிலையே தங்களுடைய வாழ்க்கையாக கருதி இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபடும் இசை கலைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மற்ற மாதங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அதிக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 3 மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டே அவர்கள் ஆண்டு முழுவதும் குடும்பம் நடத்தும் நிலை உள்ளது. இந்த வருமானத்தை நம்பியே, கல்லுக்காரன்பட்டி கிராமிய இசை கலைஞர்கள் மற்றும் சோத்துப்பாளை கிராமத்தில் நாடக கலைஞர்கள் என கலைத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் குடும்பங்கள் உள்ளன.
கோரிக்கை
இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த முன்பணம் வாங்கியிருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாத நிலையில், வாங்கிய முன் பணத்தை கூட திருப்பி கொடுக்க முடியாத நிலையில் கலைஞர்கள் உள்ளனர். தமிழக அரசால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம், அனைத்து கலைஞர்களுக்கும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
கலைத்துறையை மட்டுமே நம்பியிருந்ததால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இனி கலை நிகழ்ச்சிகளுக்கான ஆர்டர் அடுத்தாண்டுதான் கிடைக்கும் என்பதால் வருமானத்திற்கு என்ன செய்வது என்பதை அறியாது தவித்து வருகின்றனர். எனவே கிராமிய கலைஞர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்கள் தோறும் கிராமிய கலைஞர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், மாதம் ஒன்றுக்கு ஒரு கலைஞருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றும், அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story