சிவகாசியில் மகள் கழுத்தை நெரித்து கொலை; தலையாரி தற்கொலை முயற்சி 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை


சிவகாசியில்  மகள் கழுத்தை நெரித்து கொலை; தலையாரி தற்கொலை முயற்சி  2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 29 May 2020 10:58 AM IST (Updated: 29 May 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் குடும்ப தகராறில் மகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தலையாரி தற்கொலைக்கு முயன்றார். மேலும் ஆபத்தான நிலையில் விஷம் கொடுக்கப்பட்ட அவரது 2 குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நாரணாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவமுனி (வயது 37). தலையாரியான இவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார். இவருக்கு ராமலட்சுமி (25) என்ற மனைவியும், விஜயலட்சுமி (9), சிவரஞ்சனி (7), சிவபிரசாத் (4) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

ராமலட்சுமி அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். சிவகாசி அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் பட்டாசு ஆலைகள் வழக்கத்தை விட முன்னதாக மூடப்பட்டது. இதனால் ராமலட்சுமி வேலை முடிந்து நேற்று மாலை 4 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் உள்ளே சிவமுனி ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அருகே 3 குழந்தைகளும் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்தன. இதை பார்த்த அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கொலை

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது 2-வது குழந்தை சிவரஞ்சனி இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தையின் கழுத்தை நெரித்த அடையாளம் காணப்பட்டது. இதுதவிர குழந்தைகளின் மீது மருந்து வாடை வீசியது. விசாரணையில், சிவமுனி தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சிவமுனியின் இடது கையில் வெட்டு காயம் இருந்தது. மேலும் அவர் மற்றும் அவரது 2 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விசாரணை

தகவல் அறிந்ததும் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், சிவகாசி கிழக்கு போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து ராமலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் காலையில் வேலைக்கு செல்லும்போது சிவமுனிக்கும், அவரது மனைவி ராமலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள சிவமுனி முயன்று இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story