விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பஸ் முதன்மை கல்வி அலுவலர் தகவல்


விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பஸ் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 29 May 2020 11:33 AM IST (Updated: 29 May 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் சென்றுவர சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அழகப்பா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியிலும், சிவகங்கை கல்வி மாவட்டத்தில் சிவகங்கை ஆக்ஸ்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிவகங்கை 21-ம் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு அறையில் ஒரு முதன்மை தேர்வர், ஒரு கூர்ந்தாய்வாளர், 6 உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 8 நபர்கள் மட்டும் பணியில் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. மேலும் மதிப்பீட்டு மையங்களில் தூய்மை பணி செய்யும் வகையில் கிருமி நாசினி 2 முறை தெளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதிப்பீட்டு மையங்களில் ஆசிரியர்கள் கை கழுவும் வகையில் சோப்பு, சானிடைசர் வசதி மற்றும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ் வசதி

இதுதவிர மதிப்பீட்டு மையங்களில் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு அதை கண்காணிப்பதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மதிப்பீட்டு மையங்களில் உள்ள கழிப்பறையை 3 முறை சுத்தம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் மதிப்பீட்டு மையங்களுக்கு காலை 8.30 மணிக்கு வந்து விட்டு பணி முடிவடைந்ததும் வீடுகளுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எனவே விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறை, தேர்வுத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரின் அறிவுரையின்படி செயல்பட்டு தங்களது பணியை சிறப்பாக செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story