மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா


மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 May 2020 12:29 PM IST (Updated: 29 May 2020 12:29 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஈரோடு,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடக்க நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியில் இருந்து கடந்த மாதம் 15-ந் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டது. பெருந்துறையை சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் மட்டும் உயிரிழந்து விட, 69 பேர் முழுமையாக குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. அதைத்தொடர்ந்து 37 நாட்களாக கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்படாமல் இருந்தது.

கடந்த 22-ந் தேதி கவுந்தப்பாடி திருவள்ளுவர்நகரை சேர்ந்த 50 வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்திலேயே பச்சை மண்டலமாக திகழ்ந்த ஈரோடு மாவட்டம் அந்த நிலையை விடுவித்து ஆரஞ்சு மண்டலத்துக்கு சென்றது. அந்த நபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் இருந்து திரும்பியதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், மருத்துவ பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

கொடுமுடியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் சொந்த ஊர் திரும்பாமல் அங்கேயே தங்கியிருந்தார். தற்போது விமான சேவை தொடங்கி இருப்பதால் அவர் சொந்த ஊர் வர முடிவு செய்தார். இதற்காக அந்த மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளார். அங்கு அனுமதி கிடைத்த பிறகு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலமாக பெங்களூருவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலமாக கோவைக்கு வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டபோது, எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனால் அவர் கார் மூலமாக கொடுமுடிக்கு வந்தார். கடந்த 26-ந் தேதியில் இருந்து அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொடுமுடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், உறவினர்கள் என 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “கொடுமுடியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட விவரத்தை தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளோம். ஆனால் இன்று (நேற்று) வெளியிடப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் ஈரோடு சேர்க்கப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு உள்ள விவரத்தின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கலாம்”, என்றார்.

Next Story