என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி


என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 29 May 2020 10:42 PM GMT (Updated: 29 May 2020 10:42 PM GMT)

காங்கிரஸ் கட்சியில் 22 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்றும், அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கொள்ளேகால், 

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, நேற்று காலை மைசூருவில் இருந்து கார் மூலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலுக்கு வந்தார். அங்கு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த அவர், கொள்ளேகாலில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். முன்னதாக விருந்தினர் மாளிகையில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. பொதுவாக வெட்டுக்கிளிகள் எந்த பக்கம் காற்று வீசுகிறதோ, அந்த பக்கம் தான் பயணிக்கும். இதனால், தற்போதைக்கு அந்த வெட்டுக்கிளிகள் கர்நாடகத்துக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். அந்த வெட்டுக்கிளிகள் கர்நாடக எல்லையில் உள்ள மராட்டிய மாநிலத்தில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், கர்நாடகத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுக்க தயார் நிலையில் உள்ளோம். கர்நாடகத்தில் அனைத்து அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நான் கூறினால் அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவிற்கு வர தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சி மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த கட்சியில் இருப்பதற்கு யாருக்கும் விருப்பமில்லை. பா.ஜனதா தலைவர்கள் ஒப்புதல் அளித்தால், ஒவ்வொரு வாரத்திலும் தலா 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பேன். இது என்னால் முடியும்.

கொள்ளேகால் தொகுதி எம்.எல்.ஏ. என்.மகேசை சமூக நலத்துறை மந்திரியாக நியமிக்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு மகேஷ் ஒப்புகொள்ளவில்லை. அவர் இப்போது வந்தாலும் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டு மந்திரி ஆக்குவோம். அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story