திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் பயணம்


திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் பயணம்
x
தினத்தந்தி 30 May 2020 4:17 AM IST (Updated: 30 May 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 6 லட்சம் பேர். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர். கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பப்டுள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர். மத்திய அரசின் உத்தரவுப்படி அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

1,600 பேர் பயணம்

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிறப்பு ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் முஜாப்பூர்நகர் வரை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயிலில் 1,600 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். முன்னதாக இதில் பயணம் செய்ய வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளும் வழங்கப்பட்டது. பதிவு எண் படி ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த இடங்களில் அமரவைத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Next Story