ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி மர்ம நபருக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ஊழியர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது84). இவர் ஊரக உள்ளாட்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார்.
அப்போது அவர் அருகில் நின்ற 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் எடுக்க உதவுவதாக கூறினார். அவரை நம்பி கிருஷ்ணமூர்த்தி, ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அந்த கார்டை வாங்கி கொண்ட மர்ம நபர் அங்கிருந்து மாயமாகி விட்டார்.
பணத்துடன் மாயம்
பின்னர் சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக கிருஷ்ணமூர்த்தியின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவருடைய வங்கி கணக்கின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஏ.டி.எம். மையத்தில் உதவுவது போல் நடித்து ரூ.20 ஆயிரத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story