கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நேற்று காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
ஊத்துக்கோட்டை,
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து வருடந்தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் என 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
அதன்படி கடந்த 25ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று முன்தினம் இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது.
பின்னர் இந்த தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை 10.45 மணிக்கு பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. கண்டலேறு அணையிலிருந்து தற்போது தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 21.46 அடியாக பதிவானது. 396 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 130 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.
Related Tags :
Next Story