நந்திவரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
நந்திவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் காமேஸ்வரி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 58 வயதுடைய ஆண், 30 வயது பெண் மற்றும் 11 மாத பெண் குழந்தை என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன.
இதே போல் ஊரப்பாக்கம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த 47 வயது ஆணுக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 ஆனது. இவர்களில் 443 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி பூந்தமல்லியில் 3 பேரும், ஆவடி, வில்லிவாக்கம் பகுதியில் தலா 2 பேரும், திருநின்றவூர், புழல் பகுதியில் தலா ஒருவர் என 9 பேருக்கு உறுதியானது.
இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 877 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 534 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். 332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 366 ஆனது. இவர்களில் 210 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 155 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story