கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
x
தினத்தந்தி 30 May 2020 5:57 AM IST (Updated: 30 May 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி,

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தற்போது வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 200 கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது ஆகும்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நேரலகிரி ஊராட்சியில் உள்ள எருக்கன் செடிகளிலும், வாழை மரங்களிலும் நேற்று மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இருந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இரவு நேரமானதால் யாரும் அந்த பகுதியில் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) வேளாண்மைத்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் கூறுகையில், ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி பகுதியில் அதிக அளவில் வெட்டுக்கிளிகள் இருப்பதாக விவசாயிகள் கூறியிருப்பது கவலை அளிக்கிறது. எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று அந்த பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகள் எந்த ரகம், அவை பயிர்களை நாசம் செய்ய கூடியவையா? என பொதுமக்களுக்கு தெரிவித்திட வேண்டும். மேலும் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதேபோல தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், வெட்டுக்கிளிகள் நாடு முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள், காட்டு பன்றிகளால் பயிர்கள் பாதிப்பு, ஊரடங்கால் பாதிப்பு என ஏராளமான துன்பங்களை விவசாயிகள் அனுபவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் நேரலகிரி ஊராட்சி பகுதியில் வெட்டுக்கிளிகள் ஏராளமானவை படையெடுத்ததாக கூறுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story