வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி பாதிப்பு


வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால்   குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2020 9:05 AM IST (Updated: 30 May 2020 9:05 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை எஸ்டேட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து தாங்கள் வேலை செய்த இடங்களிலேயே தங்கினர். அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் உணவு வழங்காததால் பசியால் வாடினர். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர்.

இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் 1,400 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர இ-பாஸ் பெற்று தங்களது சொந்த செலவில் 600-க்கும் மேற்பட்டோர் பஸ்களில் புறப்பட்டு சென்றனர். உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடியிருப்புகள் கட்டும் பணி பாதிப்பு

குறிப்பாக ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றதால், நீலகிரியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி அருகே கேத்தி பிரகாசபுரத்தில் குடிசைமாற்று வாரியத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் 180 குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள், சதுப்பு நிலங்களில் குடியிருப்பவர்கள், வீடு இல்லாதவர்களுக்கு குடியிருப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் குடியிருப்புகள் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து வந்தனர். அதன்படி அவர்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டதால், கட்டுமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கான்கிரீட் போடுவது, சிமெண்ட் பூசுவது, தரைத்தளம் அமைப்பது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதேபோல் அல்லஞ்சியில் 110 குடியிருப்புகள் மற்றும் எமரால்டில் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது.

Next Story