ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம் அடுத்த மாதமும் பொருட்களை இலவசமாக பெறலாம்


ரேஷன் கடை ஊழியர்கள் மூலம்  வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்  அடுத்த மாதமும் பொருட்களை இலவசமாக பெறலாம்
x
தினத்தந்தி 30 May 2020 9:44 AM IST (Updated: 30 May 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

மதுரை,

கொரோனா பாதிப்பு காரணமாக ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை மாதம்தோறும் இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அடுத்த மாதமும்(ஜூன்) இலவசமாக வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் இந்த பொருட்கள் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது.

குடையுடன்

அதன்படி டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 1,394 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 8 லட்சத்து 56 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரர்களில் ஒருவர் மட்டுமே வர வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஒரு மீட்டர் சமூக இடைவெளியினை பின்பற்றி அத்தியாவசிய பொருட்கள் பெற வேண்டும். கோடை காலமாக உள்ளதால் குடையுடன் கடைக்கு வர வேண்டும் என்றும், இதன் மூலம் சமூக இடைவெளி பின்பற்ற ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story