அரசு வழங்கிய நிவாரண தொகையை கடனுக்கு வரவு வைத்ததாக வங்கி முன்பு திரண்ட பழங்குடியின தொழிலாளர்கள்


அரசு வழங்கிய நிவாரண தொகையை கடனுக்கு வரவு வைத்ததாக வங்கி முன்பு திரண்ட பழங்குடியின தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 30 May 2020 10:26 AM IST (Updated: 30 May 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலத்தில், அரசு வழங்கிய நிவாரண தொகையை கடனுக்கு வரவு வைத்ததாக கூறி, வங்கி முன்பு பழங்குடியின தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம், 

கீரமங்கலத்தில், அரசு வழங்கிய நிவாரண தொகையை கடனுக்கு வரவு வைத்ததாக கூறி, வங்கி முன்பு பழங்குடியின தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கி முன்பு திரண்ட தொழிலாளர்கள்

கீரமங்கலம் அறிவொளி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பழங்குடியினர் (நரிக்குறவர்கள்) திருவிழாக்களில் பாசி, மணி, ஊசி, பலூன், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும், தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்றும் பொருட்கள் வாங்கி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாக்களில் விற்பனை செய்வதற்காக ஒவ்வொருவரும் தால ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த பொருளும் விற்பனை செய்ய முடியாமல், கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், உணவுக்கே தடுமாறும் நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு வேலை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை நிவாரணமாக, அவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிவாரணம் கீரமங்கலம் அறிவொளி நகர் பழங்குடியி தொழிலாளர்களுக்கு (நரிக்குறவர்) கீரமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், அவர்களின் கணக்குகளில் வரவாகி உள்ள தகவல் அறிந்து, நேற்று பலர் வங்கி நிவாரணத் தொகையை எடுக்க சென்றனர். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை. மேலும் வங்கி நிர்வாகத்தின் சார்பில், தொழிலாளர்கள் வாங்கிய வங்கி கடன்களுக்காக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அங்கு திரண்ட பழங்குடியின தொழிலாளர்கள், எங்களுக்கு நிவாரணத் தொகை வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மூலம், தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.

மாட்டு வண்டிகள், டிப்பர் லாரி பறிமுதல்

*வடகாடு அருகே அக்னி ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகளை வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ் தலைமையிலான போலிசார் பறிமுதல் செய்தனர்.

*பேரையூர் பகுதியை சேர்ந்த 2 பேர் ஒரு ஆட்டோவில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றனர். பெருமநாடு மைலாப்பட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேரும் காயம் அடைந்தனர்.

*காரையூர் அருகே உள்ள சூரப்பட்டி வழியாக மணல் கடத்தி செல்லப்படுவதாக வருவாய்த்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் வருவாய்த்துறையினர் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. இதையடுத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை லாரியை பின் தொடர்ந்து எழுவன்கோரை என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொழிலாளி தற்கொலை

*விராலிமலை தாலுகா மீனவேலி கிராமம் பெரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னு மகன் முருகேசன்(36). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் முருகேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அன்று மாலை தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த முருகேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

*கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் நேரு(63) என்பவர் தனது தோட்டத்திற்கு சம்பவத்தன்று காலை தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

*கந்தர்வகோட்டை அருகில் உள்ள கோமாபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை டாக்டராக பணிபுரிந்து வருபவர் தினேஷ்குமார்(40). இவர், கோமாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த மூக்கையன் மகன் வளத்தான், பெருமாள் மகன் கோவிந்தராஜ், ராமராஜ் மகன் வீரமணி, மணிவண்ணன் மகன் ராஜ்குமார் ஆகிய 4 பேரும் தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சரக்கு வேனில் மணல் கடத்தி வந்த கீழ அய்யம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (23) திருக்கோகர்ணம் போலீசாரிடம் சிக்கினார்.

* விநாயகர் கோவில் விழா தொடர்பாக பணம் வசூலித்த போது புதுக்கோட்டை காமராஜபுரம் 28-வது தெருவை சேர்ந்த பிரபு (27), கவிதாவை (34) தாக்கியதாக கணேஷ்நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

* முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய போது புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story