இலவச ரேஷன் பொருட்களுக்காக கடலூரில் வீடு வீடாக டோக்கன் வினியோகம்


இலவச ரேஷன் பொருட்களுக்காக கடலூரில் வீடு வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 30 May 2020 10:50 AM IST (Updated: 30 May 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக கடலூரில் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நடந்தது.

கடலூர்,

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, 4-வது கட்டமாக மே 31-ந் தேதி (அதாவது நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் குறைந்த விலைக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் விற்பனை செய்து வருகிறது.

ஏற்கனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. தொடர்ந்து ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வினியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு தேவையான அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வரவழைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் பொருட்கள் வருகிற 1-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்கும் வகையில் நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரர்கள் என்ற வீதம் சுழற்சி முறையில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதையடுத்து ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர். அப்போது டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் மட்டும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் ரேஷன் கடைக்கு வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்..

Next Story