தூத்துக்குடி அருகே 1,680 பேருக்கு நிவாரண உதவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


தூத்துக்குடி அருகே 1,680 பேருக்கு நிவாரண உதவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 30 May 2020 10:30 PM GMT (Updated: 30 May 2020 6:21 PM GMT)

தூத்துக்குடி அருகே 1,680 பேருக்கு நிவாரண உதவியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,680 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, செக்காரக்குடி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 500 பேருக்கும், வல்லநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கும், வசவப்பபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கும், அனவரதநல்லூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 400 பேருக்கும், நாட்டார்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கும், கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 130 பேருக்கும் என மொத்தம் 1,680 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தூத்துக்குடிக்கு மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 142 பேருக்கும், பிறமாவட்டங்களில் இருந்து வந்த 20 பேர் உள்பட மொத்தம் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வர வேண்டும். அப்போது முககவசங்கள் அணிந்து வர வேண்டும்.

தற்போது ஊரக பகுதியில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நகராட்சி பகுதிகளில் ஏ.சி. இல்லாத நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், வட்டாட்சியர் சந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story