ஸ்டிரெச்சர் இல்லாததால் சம்பவம்: ஆக்சிஜன் மூலம் சுவாசம் பெறும் குழந்தையை கையில் தூக்கிச் சென்ற தந்தை


ஸ்டிரெச்சர் இல்லாததால் சம்பவம்: ஆக்சிஜன் மூலம் சுவாசம் பெறும் குழந்தையை கையில் தூக்கிச் சென்ற தந்தை
x
தினத்தந்தி 31 May 2020 4:15 AM IST (Updated: 31 May 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டிரெச்சர் இல்லாததால் ஆக்சிஜன் மூலம் சுவாசம் பெறும் குழந்தையை கையில் தூக்கிச் சென்ற தந்தை, தார்வார் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்ப்பட்ட அவலம்.

பெங்களூரு,

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கர்நாடக மருத்துவ அறிவியல் கழகம் (கிம்ஸ்) அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையை மற்றொரு வார்டுக்கு மாற்றி டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் ஸ்டிரெச்சர் தட்டுப்பாடு காரணமாக அந்த குழந்தையை கொண்டு செல்ல ஸ்டிரெச்சர் கிடைக்கவில்லை. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் மூலம் சுவாசம் பெற்று வரும் குழந்தையை தந்தை கையில் தூக்கிக்கொண்டு செல்ல, ஊழியர் ஒருவர் ஆக்சிஜன் உருளையை தள்ளுவண்டியில் தள்ளிச் சென்றுள்ளார்.

இதனை அங்கு வந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற ஏழை, எளிய மக்கள் தான் வருகிறார்கள். ஆனால் போதிய மருத்துவ உபகரணங்கள், வசதிகள் இல்லாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இதுபோன்ற ஒரு நிலைமை இனியும் நடக்காமல் இருக்க கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story