தஞ்சையில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா
தஞ்சையில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை வாலிபர்
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 87 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில் 76 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 54 வயதான ஆணும், அவரது 24 வயதான மகனும் தஞ்சையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தனர். இவர்களில் 54 வயதான தந்தைக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்தநிலையில் அவரது 24 வயது மகனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை ஊராட்சி முனுமாக்காடு கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் சென்னையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். அவரை வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தினர். அவரது சளி மாதிரி எடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
ரேஷன் கடை விற்பனையாளர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக திருவிடைமருதூர் தாலுகா வளையவட்டம் கிராமத்தை சேர்ந்த 50 வயது நபர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் கொரோனா பரிசோதனை நடந்தது. அதன் முடிவு தெரிவதற்கு முன்பாகவே அவர் தனது கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருடன் சேர்ந்து ஊருக்கு திரும்பினார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
3 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டுக்கோட்டை பாதரங்கோட்டையை சேர்ந்த 48 வயதான ஆண், கொல்லுக்காடு கிராமத்தை சேர்ந்த 20 வயது ஆண், ஒரத்தநாட்டை சேர்ந்த 31 வயதான ஆண் ஆகிய 3 பேர் நேற்று குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர்.
இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story