கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வழங்கினார்
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட என்.சி.சி. மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட என்.சி.சி. மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
என்.சி.சி. மாணவர்கள் பங்கு
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் 11-வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. மாணவ -மாணவிகள் 197 பேரும், என்.சி.சி. அதிகாரிகள் 25 பேரும், ராணுவ பயிற்றுனர்கள் 7 பேரும் ஆக 229 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முதல் மே மாதம் 16-ந் தேதி வரை 39 நாட்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக பீகார், ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலத்தவர்கள் ரெயிலில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றபோது அவர்களை ஒழுங்குபடுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்ததில் என்.சி.சி. மாணவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
14 மாணவர்கள்
இதையடுத்து என்.சி.சி. மாணவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களில் 14 பேரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாணவர்களுடன் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி என்.சி.சி. அதிகாரி சாம்சன், 11-வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வி.வி.பிரசாத் ஆகியோரும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சீனியர் மாணவர் மாரிஸ் கோகுல் பேசும் போது, ‘கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் போலீசாருடன் இணைந்து பங்கேற்றது புதுமையான அனுபவமாக இருந்தது. போலீசாரின் பணி எளிதானதாக இருந்தது என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர்களுடன் பணியில் ஈடுபட்டபோதுதான் போலீசாரின் பணி எளிமையானது அல்ல என்பது எங்களுக்கு தெரிய வந்தது“ என்றார்.
உதவி கலெக்டர்
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ரிஷப், நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர், குளச்சல் உதவி சூப்பிரண்டு விஷ்வேஸ் சாஸ்திரி, தக்கலை துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், மாவட்ட தனிப்பிரிவு சூப்பிரண்டு கண்மணி, முன்னாள் ராணுவ வீரர்களின் உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று சான்றிதழ் பெற்ற 14 என்.சி.சி. மாணவர்களைத்தவிர மற்ற மாணவர்களுக்கு அவரவர் கல்லூரி முதல்வர்கள் வாயிலாக வழங்கப்பட உள்ளதாக முதன்மை என்.சி.சி. அதிகாரி அருள்ராஜன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story