கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் தயாராகும் 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள் - துணை முதல்-மந்திரி தகவல்


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் தயாராகும் 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள் - துணை முதல்-மந்திரி தகவல்
x
தினத்தந்தி 31 May 2020 11:25 PM GMT (Updated: 31 May 2020 11:25 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

மைசூரு,

மைசூருவுக்கு நேற்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கர்நாடக மாநில பா.ஜனதாவில் எந்தவித கூச்சல், குழப்பமும் இல்லை. உட்கட்சி பூசல் இல்லை. கட்சி மற்றும் மந்திரி கூட்டத்தில் உள்நோக்கம், தகராறு எதுவும் இல்லை. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எடியூரப்பா ஆட்சி எஞ்சியுள்ள 3 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். எடியூரப்பாவே முதல்-மந்திரியாக நீடிப்பார்.

பா.ஜனதா மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது, அவர்களே எடியூரப்பா ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கூறி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய்யான தகவல். அவர் சொல்வதுபோல் எதுவும் நடக்காது. அவர்களது ஆட்சி கவிழ்ந்ததால் அவர் மனவேதனையில் பேசுகிறார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலைமை வந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனா பிரச்சினையை திறம்பட எதிர்கொண்டு வருவதால் உலக அளவில் நம் நாட்டை அனைவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

130 கோடி மக்கள் உள்ள நம் நாட்டில் ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பிரதமர் நரேந்திர மோடி மக்களை படிப்படியாக காப்பாற்றி வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூருவிலேயே 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள், படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவைக் கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் இப்போது மகிழ்ச்சியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற 8-ந் தேதி முதல் மாநிலத்தில் அனைத்து கோவில்களும், வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும். அந்த கட்டுப்பாடுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்கள் தகுந்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story