தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா நெல்லையில் ஒரே நாளில் 38 பேர் ‘டிஸ்சார்ஜ்’


தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா நெல்லையில் ஒரே நாளில் 38 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 1 Jun 2020 5:25 AM IST (Updated: 1 Jun 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நெல்லையில் நேற்று ஒரே நாளில் 35 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ராமானுஜம்புதூர், தெற்கு மரந்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 4 பேருக்கும் ஆக மொத்தம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 10 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்தது.

மும்பை, தாராவி பகுதியில் இருந்து ரெயிலில் வந்த பயணிகள் நெல்லையில் கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நேற்று யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முகாம்களில் இருந்தவர்கள் நேற்று மாலை அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 352 பேர் கொரோனா தொற்றுடன் சேர்க்கப்பட்டதில் குணமடைந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நேற்று ஒரே நாளில் 38 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 90 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 211 பேர் குணமாகி உள்ளனர். ஒருவர் இறப்பு தவிர மீதி 140 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்திலும் நேற்று யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அந்த மாவட்டத்தில் மொத்தம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 63 பேர் குணமாகி வீடு திரும்பியதால், மீதி 23 பேர் மட்டும் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story