தர்மபுரி மாவட்டத்தில் 14 ஏரிகளை தூர்வார ரூ.8.11 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் 14 ஏரிகளை தூர்வார ரூ.8.11 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2020 5:57 AM IST (Updated: 1 Jun 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 14 ஏரிகளை தூர்வார ரூ.8.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அருகே ரூ.85.82 லட்சம் மதிப்பீட்டில் அமானிதலாவ் ஏரியில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோன்று ரூ.58.94 லட்சம் மதிப்பீட்டில் மகேந்திரமங்கலம் ஏரியில் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பஞ்சப்பள்ளி ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் ரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் நாகராஜன், உதவி கலெக்டர் தேன்மொழி, பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஏரிகளை தூர்வாரும் பணி மற்றும் பஞ்சப்பள்ளியில் குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகள் தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் 14 ஏரிகளை தூர்வார ரூ.8 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் ஒட்டு மொத்தமாக 10 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தர்மபுரி நகராட்சிக்கு, பஞ்சப்பள்ளி நீர் ஆதாரத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பஞ்சப்பள்ளி ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, நாளொன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்து அவர்களுக்கு வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு தர்மபுரி நகராட்சி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் பஞ்சப்பள்ளியில் நீராதாரம் முழுமையாக வறண்டு விட்ட காரணத்தினால் தற்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டும்தான் எடுக்க முடியும். இந்த தண்ணீர் குழாய்களில் கொண்டு சேர்ப்பது கடினம். எனவே தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் மக்களின் முழுமையான தண்ணீர் தேவைகளை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், துணை தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சரவணன், கோவிந்தராஜ், தாசில்தார் ராஜா, பேரூராட்சி அலுவலர் காதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கவுரி, தண்டபாணி, மீனா, உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், வெங்கடேஷ், பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story