சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2020 6:08 AM IST (Updated: 1 Jun 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் உள்ள பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. இதில் சம்பளத்தில் ஒரு பங்கு தொகை பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இந்த நடைமுறையை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பஸ் பணிமனைகளில் நேற்று போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பல்லவன் இல்லம், திருமங்கலம், அடையாறு, ஆவடி, குரோம்பேட்டை, மந்தைவெளி, தாம்பரம், வடபழனி உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது:-
எப்போதும் போல அல்லாமல் இந்த மாதம் புதிய புதிய கணக்குகளை கணக்கிட்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளத்தை அரசு பட்டுவாடா செய்திருக்கிறது. இந்தமுறை குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரையில் தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. பலருக்கு அவர்களது அனுமதி இல்லாமலேயே விடுப்பை நீக்கி முழுமையான சம்பளத்தை வழங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இதுதொடர்பாக சில தகவல்கள் வெளியான சமயத்திலேயே நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்புகொண்டு, இதுகுறித்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ‘ஒன்றும் இல்லை, கவலை வேண்டாம்‘, என்று சொல்லிக்கொண்டே இந்த முறை சம்பள பணத்தில் கை வைத்திருக்கிறார்கள்.

போக்குவரத்து துறையில் பஸ்கள் இயக்கப்படாததால் வருமானம் இல்லை. எனவே சம்பளம் பிடிக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் வண்டி ஓட்ட தயாராகவே இருக்கிறோம். ஒன்று எங்களுக்கு வண்டி தாருங்கள். இல்லையென்றால் முழு சம்பள பணத்தை தாருங்கள். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சம்பளம் பிடித்தம் செய்ததை ஏற்கவே முடியாது. இது நியாயமற்ற செயலாகும். எனவே அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மீண்டும் ஊழியர்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story