தமிழகத்தில் மதுக்கடைகளை விரும்பி திறந்து வைக்கவில்லை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விளக்கம்


தமிழகத்தில்  மதுக்கடைகளை விரும்பி திறந்து வைக்கவில்லை  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விளக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2020 1:13 AM GMT (Updated: 2020-06-01T06:43:15+05:30)

தமிழகத்தில் மதுக்கடைகளை விரும்பி திறந்து வைக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் நடுவப்பட்டி கண்மாய் குடிமராமத்து திட்ட பணி நேற்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.28 லட்சம் செலவில் நடைபெற்றும் இந்த பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 174 லட்சம் செலவில் குடிமராமத்து பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படும் அனைத்து கண்மாய்களும் குடிமராமத்து செய்வதன் மூலம் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்கள். கண்மாய் குடிமராமத்து பணிகள் நடைபெறும்போது அந்தந்த கிராமமக்களுக்கும் வேலை வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏழைமக்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

மதுக்கடைகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை விரும்பி திறந்து வைக்கவில்லை. வரும் காலங்களில் கொஞ்சம், கொஞ்சமாக மதுக்கடைகள் மூடப்படும். ஊரடங்கு தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் மக்களை பாதுகாக்கவே எடுக்கப்படுகிறது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் வரப்பெற்ற 10 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நாங்கள் விளம்பரம் செய்வது இல்லை. ஆனால் தி.மு.க. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஊர், ஊராக சென்று பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதாக கூறி கிராமசபை கூட்டம் போட்டு மனுக்களை பெற்றனர். அந்த மனுக்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா?. நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார்?. நன்றி கூட கூறவில்லை. மக்கள் பிரச்சினையை தீர்த்து வருவது அ.தி.மு.க.தான்.

அரசியல் நாடகம்

பொதுமக்கள் தற்போது பாதிப்பில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பொய். அவர் அரசியல் நாடகம் ஆடுகிறார். விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டு வந்த குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது உள்ள கோடைக்காலத்தில் எங்கும் குடிநீர் பிரச்சினை இல்லை. இந்த கிராமத்துக்கு தேவையான தண்ணீர் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் சிறப்பாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மக்களை பாதுகாக்கின்ற அரசாக எடப்பாடியார் அரசு எப்போதும் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் கலெக்டர் கண்ணன், சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, துணைத்தலைவர் சுபாஷினி, பஞ்சாயத்து தலைவர் பாண்டிச்செல்வி, கோமதிசங்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், வேண்டுராயபுரம் காளிமுத்து, நடுவப்பட்டி குமரேசன், குருவையாதேவர் மற்றும் அரசு அதிகாரிகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story