தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் 451 பஸ்கள் இன்று முதல் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டலம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொது பஸ் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி 2-வது மண்டலத்தின் பகுதிகளிலும், அருகில் உள்ள மற்ற மாவட்ட எல்லை பகுதி வரையிலும் பஸ்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் இயக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலம் மூலம் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. 60 சதவீத பயணிகளுடன் 178 டவுன் பஸ்களும், 65 புற நகர பஸ்களும் என மொத்தம் 243 பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோன்று அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொதுமேலாளர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) வரை, தர்மபுரி மண்டலம் மூலம் 50 சதவீத பஸ்களும், 60 சதவீத பயணிகளுடன் 144 நகர பஸ்களும், 64 புறநகர பஸ்களும் என மொத்தம் 208 பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தவறாமல் முக கவசம் அணிந்து, பஸ்சின் பின்புற படிக்கட்டில் ஏற வேண்டும். முன்புற படிக்கட்டில் இறங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்சில் பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story