கோவை மண்டலத்தில் 450 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
கோவை மண்டலத்தில் 450 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
கோவை,
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி 4-வது ஊரடங்கு முடிந்து 5-வது கட்ட ஊரடங்கு தொடங்கிய நிலையில் ஒரு மண்டலத்துக்குள் பஸ்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்குள் இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கோவையில் அரசு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகத்தினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். டெப்போவில் உள்ள பஸ்களை பழுது பார்த்து பேட்டரிகளை சரிபார்த்து அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
450 பஸ்கள்
இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 20 டெப்போக்களில் மொத்தம் 1,018 பஸ்கள் உள்ளன. அவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு 107 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பஸ்கள் போக மீதி உள்ள பஸ்களில் 50 சதவீத பஸ்களான சுமார் 450 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இதில் டவுன் பஸ்களும் அடங்கும்.
கோவையிலிருந்து நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இரவு 9 மணிக்கு மேல் பஸ்களை இயக்கக் கூடாது என்பதால் இரவு 9 மணிக்கு போய் சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இ-பாஸ் தேவையில்லை
பஸ்களில் 60 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அப்போது தான் பஸ்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பஸ்களில் 3 இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு 2 பயணிகள் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுவார்கள். பஸ்சுக்குள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி கிடையாது. மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்குள் பஸ்களில் செல்ல இ-பாஸ் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறி மார்க்கெட்டுகள் அகற்றப்பட்டன
பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதால் பஸ் நிலையங்களில் இதுநாள் வரை செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டுகள் நேற்று அகற்றப்பட்டன. அதன்படி காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பஸ் நிலையங்கள் பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாய்பாபா காலனி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மட்டும் வருகிற 7-ந் தேதி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story