68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இன்று முதல் இயங்குகிறது; பொதுமக்கள் மகிழ்ச்சி


68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இன்று முதல் இயங்குகிறது; பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Jun 2020 3:28 AM GMT (Updated: 2020-06-01T08:58:45+05:30)

68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இன்று முதல் இயங்குகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் அன்று முதல் பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கடந்த வாரம் முதல் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின. இதனால் தமிழகத்தில் எப்போது பஸ்கள் ஓடும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், 5-ம் கட்டமாக ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து வசதிக்காக 8 மண்டலங்களாக பிரித்து அந்தந்த மண்டலத்திற்குள் மட்டும் 50 சதவீதம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் 68 நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது ஒரு மண்டலமாகவும் உள்ளது. இங்கு விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 3,500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

பஸ்சில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்தில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் தொடங்கி உள்ளது. பணிக்கு வரும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் விதமாக, பணிமனையின் நுழைவு வாயிலில் அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மருத்துவ பணிக்காக வெளியே செல்லும் பஸ்களில் கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்படுகிறது.

விழுப்புரம் கோட்டத்தை பொறுத்தவரைக்கும் மொத்தம் 3,500 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இதில் விழுப்புரத்தில் உள்ள பணிமனையில் 750 பஸ்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இதை தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள பணிமனைகளிலும் பஸ்களை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நேற்று நடைபெற்றது.

விழுப்புரம் பணிமனையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட அதிகாரிகள், பஸ்களை சுத்தப்படுத்தி, கிருமிநாசினி மருந்து தெளித்து, தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு தேவையான முக கவசம், கையுறை, சானிடைசர் போன்றவை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதேபோல் பஸ் நிலையங் களிலும் கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டம் வரைவது என்று பல்வேறு பணிகள் நேற்று முழுவீச்சில் நடைபெற்றது. 68 நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறி மார்க்கெட் மாற்றி அமைப்பு

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் புதிய பஸ்நிலையம் மற்றும் பழைய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதனால் அந்த இடங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. அதன்படி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தை பொறுத்தவரைக்கும், கோர்ட்டு அருகே புதுச்சேரி, திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடம், சென்னை, சேலம், கடலூர் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படும்.

விழுப்புரம் பழைய பஸ்நிலையத்தில் இருந்த காய்கறி மார்க்கெட் காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஏற்கனவே இயங்கி வரும் உழவர் சந்தையுடன் சேர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story