கொடைக்கானலில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் 41 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
கொடைக்கானலில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் 41 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர். அதேபோல் கட்டுமானம், விவசாய கூலிவேலையிலும் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச்செல்ல முடியாமலும், வருமானம் இன்றியும் அவர்கள் தவித்து வந்தனர். இதற்கிடையே கொடைக்கானலில் தவித்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர். அந்த வகையில், நேற்று கொடைக்கானலில் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் 41 பேரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கொடைக்கானல் பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. சிவகுமார் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தாசில்தார் வில்சன் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி பஸ்கள் மூலம் அவர்களை திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story