சொந்த மாநிலத்திற்கு அலைஅலையாய் செல்லும் தொழிலாளர்கள்: 4 சிறப்பு ரெயில்களில் 6,400 பேர் பயணம் பீகார், ஒடிசா, மேற்குவங்காளம் சென்றனர்


சொந்த மாநிலத்திற்கு அலைஅலையாய் செல்லும் தொழிலாளர்கள்: 4 சிறப்பு ரெயில்களில் 6,400 பேர் பயணம் பீகார், ஒடிசா, மேற்குவங்காளம் சென்றனர்
x
தினத்தந்தி 1 Jun 2020 10:35 AM IST (Updated: 1 Jun 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு தொழிலாளர்கள் அலைஅலையாய் செல்ல தொடங்கி உள்ளனர். 4 சிறப்பு ரெயில்களில் 6400 பேர், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் சென்றனர்.

திருப்பூர், 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 6 லட்சம் பேர். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர். கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர்.

சிறப்பு ரெயில்கள்

மேலும், பலர் உணவுகளும் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வந்தனர். எனவே தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்க்ள போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அலைஅலையாய் சொந்த மாநிலத்திற்கு செல்ல தொடங்கி விட்டனர்.

6,400 பேர் சொந்த ஊர்களுக்கு...

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று பீகாருக்கு 2 ரெயில்களும், ஒடிசாவிற்கு ஒரு ரெயிலும், மேற்கு வங்காளத்துக்கு ஒரு ரெயிலும் என மொத்தம் 4 சிறப்பு ரெயில்கள் மதியம் முதல் இரவு வரை பல்வேறு நேரங்களில் இயக்கப்பட்டன. இதில் ஒரு ரெயிலில் 1,600 பேர் என 4 ரெயில்களில் மொத்தம் 6 ஆயிரத்து 400 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

முன்னதாக இதில் பயணம் செய்ய வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளும் வழங்கப்பட்டது. பதிவு எண் படி ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த இடங்களில் அமரவைத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Next Story