திருப்பூர் மாவட்டத்தில் 200 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கம்


திருப்பூர் மாவட்டத்தில் 200 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2020 10:43 AM IST (Updated: 1 Jun 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் 200 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 4 கட்ட ஊரடங்கு முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக இதுவரை பஸ் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் மற்றும் அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சில பகுதிகளில் பஸ்களை, பல்வேறு நிபந்தனைகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று முதல்...

அதன்படி பஸ் போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும். அறிவுறுத்தப்பட்ட மண்டலங்களுக்குள் பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்கள் ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் நேற்று காலையில் இருந்தே திருப்பூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1 மற்றும் பணிமனை 2 ஆகியவற்றில் அரசு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுபோல் புதிய பஸ் நிலையம் மற்றும் பணிமனைகளில் ஆங்காங்கே கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

இருக்கைகளில் ஸ்டிக்கர்

இதுபோல் அனைத்து பஸ்களிலும் பயணிகள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளில் பயணிகள் எதில் அமர வேண்டும் என்பதை விளக்கும் வகையில் இடைவெளி விட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுபோல் ஒவ்வொரு பஸ்களுக்கும் கிருமிநாசினிகள் வழங்கப்பட உள்ளன. வருகிற பயணிகள் அனைவரும் கைகளை சுத்தம் செய்தவுடன் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதுபோல் பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்பது உள்பட விதிமுறைகளுடன் பஸ்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஸ்கள் இயங்க உள்ள நிலையில் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் நேற்று மாலையில் இருந்தே பணிமனைகளுக்கு வர தொடங்கினார்கள்.

200 பஸ்கள் இயக்கம்

இது குறித்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளது. இந்த பணிமனைகளில் இருந்து நாளை (அதாவது இன்று) முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசின் உத்தரவுப்படி 50 சதவீத பஸ்கள் மற்றும் 60 சதவீத பயணிகளுடன் இயங்கும். அதன்படி சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளில் சற்று தூரமாக, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதில் திருப்பூர் பணிமனை 1-ல் இருந்து 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் மாவட்டத்திற்குள் செல்லும் 20 பஸ்களும், வெளிமாவட்டங்களுக்கும் செல்லும் 18 பஸ்களும் ஆகும். இதுபோல் திருப்பூர் பணிமனை 2-ல் இருந்து 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 14 மாவட்டத்திற்குள் செல்லும் பஸ்சும், 6 பஸ்கள் வெளிமாவட்டங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இதுபோல் உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் உள்பட பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் வெளிமாவட்டங்களுக்கு செல்கிற பஸ்கள் அரசு அறிவுறுத்தியுள்ள மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அந்த மாவட்டங்களின் பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படாது.

Next Story