மக்காச்சோளம் அறுவடை பணி: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


மக்காச்சோளம் அறுவடை பணி: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 1 Jun 2020 10:56 AM IST (Updated: 1 Jun 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோளம் அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, எள், உளுந்து, பச்சைபயறு, பூக்கள், வெள்ளரிக்காய், பரங்கிக்காய், தர்பூசணி, வெற்றிலை போன்றவை சாகுபடி செய்து வருகின்றனர். இது தவிர மக்காச்சோளம் சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள சாகுபடிக்கு மிக குறைந்த வேலையாட்களே போதுமானது. அனைத்து வித மண்ணிலும் இப்பயிரை சாகுபடி செய்யலாம் என்பதாடு ஆண்டு முழுவதும் இதை பயிரிடலாம்.

நெற்பயிருடன் ஒப்பிடும்போது மக்காச்சோளம் சாகுபடிக்கு குறைந்தளவே செலவாகும். கோழிப்பண்ணை, கால்நடை தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுகிறது. தற்போது மக்காச்சோளம் விளைச்சல் அடைந்துள்ளதால் தஞ்சையை அடுத்த விளார், கொல்லாங்கரை, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல்லடம், பழனி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வருகின்றனர். வயல்களில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை சாலையோரங்களில் கொட்டி வைத்து நன்றாக காய வைத்த மக்காச்சோளத்தை மூட்டைகளில் கட்டி அங்கேயே எடை போட்டு கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, வாகன வாடகை போன்றவை மிச்சமாகிறது. ஆனால் மக்காச்சோளத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 டன் மக்காச்சோளம் ரூ.27 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் ரூ.14 ஆயிரத்து 700-க்கு தான் வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஏற்கனவே படைப்புழு தாக்குதலினால் மகசூல் குறைந்துள்ளது. விதை, உரம் உள்ளிட்டவற்றுக்கு அதிக செலவு செய்துள்ளோம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். அந்த செலவு தொகை வருவது கூட சிரமம் தான். ஊரடங்கிற்கு முன்பாக மக்காச்சோளம் நல்ல விலைக்கு விற்பனையானது. ஆனால் இப்போது 1 டன்னுக்கு ரூ.13 ஆயிரம் வரை விலை குறைந்துவிட்டது. மக்காச்சோளத்தை 3 மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம்.

ஆனால் அப்போது லாபமான விலை கிடைக்குமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதனால் வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. ஆனால் மக்காச்சோளத்துக்கு அவ்வாறு விலை நிர்ணயம் செய்யாததால் ஆண்டுதோறும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாகுபடி தொகையில் குறைந்தபட்ச லாபம் கிடைக்கும் வகையிலாவது விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

Next Story