பணிமனைகள் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


பணிமனைகள் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2020 5:43 AM GMT (Updated: 1 Jun 2020 5:43 AM GMT)

பணிமனைகள் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று காலை அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் வேலுச்சாமி கூறுகையில், “புதுக்கோட்டை மண்டலத்தில் 8 கிளை பணிமனைகள் உள்ளன. இதில் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட 2,600-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 260-க்கும் மேற்பட்டவர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்” என்றார்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தின்போது பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டிருந்ததால் பாதுகாப்பு பணிக்காக டவுன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே பணிமனை மேலாளர், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் சமரசம் ஏற்படாததால் யாரும் கலைந்து செல்லவில்லை.

இதற்கிடையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடந்த நிலையில் தொழிற்சங்க தலைமை நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் டிரைவர், கண்டக்டர்களின் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னமராவதி, ஆலங்குடி

இதேபோல் பொன்னமராவதியில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு எல்.பி.எப். மத்திய சங்க செயலாளர் அடைக்கலம் தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப், சி.ஐ.டி.யு., ஏ.ஏ.எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் ஆதப்பன், கிளை மேலாளர் டி.இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள், தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தனர்.

ஆலங்குடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை கொடுக்காமல் குறிப்பிட்ட நாட்களையும், வார ஓய்வு நாட்களையும் விடுப்பில் கழித்துக்கொண்டு சம்பளம் வழங்குவது, விடுப்பு இல்லாதவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வது ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story