நெல்லை ரெயில் நிலையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற டிக்கெட் முன்பதிவு


நெல்லை ரெயில் நிலையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற டிக்கெட் முன்பதிவு
x
தினத்தந்தி 1 Jun 2020 6:11 AM GMT (Updated: 1 Jun 2020 6:11 AM GMT)

நெல்லை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் ரெயிலில் பயணிக்க இ-பாஸ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது

நெல்லை,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பயணிகளுக்கான ரெயில், பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதில் ஒரு ரெயில் திருச்சி -நாகர்கோவில் இடையே நெல்லை வழியாக இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 02627) காலை 11.05 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருகிறது. மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ரெயில் (வண்டி எண் 02628) மாலை 3 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு 4.20 மணிக்கு வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருச்சியை இரவு 10.15 மணிக்கு சென்றடைகிறது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ஒரு சிலர் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 2-வது நாளில் டிக்கெட் முன்பதிவில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று காலையிலேயே 30-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அவர்களை போலீசார் வரிசைப்படுத்தி, சமூக இடைவெளியுடன் டிக்கெட் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். சிலர் நெல்லையில் இருந்து திருச்சிக்கும், அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் விழுப்புரம் உள்ளிட்ட ரெயில் செல்லும் பகுதிகளுக்கும் செல்ல டிக்கெட் எடுத்தனர்.

இந்த நிலையில் அவர்களது பயண திட்டத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. அதாவது தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்குள் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் எனப்படும் அரசு அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில் அதை தளர்த்தி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து அந்தந்த மண்டலத்துக்குள் மக்கள் அதாவது தங்களை சுற்றி உள்ள குறைந்த மாவட்டங்களுக்குள் மக்கள் சென்று வர தடை இல்லை என்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரெயில்கள் இந்த மண்டல எல்லைகளை கடந்து இயக்கப்பட்டாலும், அதில் பயணம் செய்யும் பயணிகள் ஒரு மண்டலத்தை விட்டு மற்றொரு மண்டலத்துக்கு செல்ல வேண்டுமானால் இ-பாஸ் வாங்கியே தீர வேண்டும் என்று நேற்று மதியத்துக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு, ரெயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களை தொடர்பு கொண்டு மண்டலம் விட்டு மண்டலம் செல்வதால் இ-பாஸ் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் ரெயிலில் பயணிக்க முடியாது என்று கூறினார்கள். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இ-பாஸ் எடுப்பதா? அல்லது டிக்கெட்டை ரத்து செய்வதா? என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இதே போல் ரெயில் பயணத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story