கொரோனா வைரசிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதில் பிரதமர் மோடி வெற்றி - முதல்-மந்திரி எடியூரப்பா பாராட்டு


கொரோனா வைரசிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதில் பிரதமர் மோடி வெற்றி - முதல்-மந்திரி எடியூரப்பா பாராட்டு
x
தினத்தந்தி 1 Jun 2020 11:15 PM GMT (Updated: 1 Jun 2020 9:10 PM GMT)

கொரோனா வைரசிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதில் பிரதமர் மோடி வெற்றி கண்டுள்ளார் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்று வெற்றிகரமாக ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. அவரது தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்கிறது. அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்த்திற்காகவும் மோடி பாடுபடுகிறார். நாடு சுயசார்பு அடைய வேண்டும் என்பதை மக்களிடையே வலியுறுத்தி வருகிறார். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மோடி அபாரமான தலைவராக திகழ்கிறார். கடந்த ஓராண்டில் முக்கியமான முடிவுகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.

முத்தலாக் முறை ஒழிப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது, ராமர்கோவில் பிரச்சினைக்கு தீர்வு கண்டது, வந்தேபாரத் திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, புதிய மோட்டார் வாகன சட்டம், பிரதமர் கிசான் சம்மான் நிதியை உருவாக்கியது, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறிய கடை உரிமையாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் போன்ற பல்வேறு துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம், உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், இந்தியாவில் தயாரிப்போம், சுயசார்பு இந்தியா உள்ளிட்ட திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரை சிறப்பான முறையில் கையாண்டுள்ளார்.

கொரோனாவை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தினார். இதில் அவர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் கண்டுள்ளார். அவர் எடுத்த இந்த நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. பிரதமர் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் தொடர்பில் இருந்தார்.

அடிக்கடி காணொலி காட்சி மூலம் முதல்-மந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். பிரதமர் மோடி, சவாலை வாய்ப்பாக கருதி போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதனால் ஒட்டுமொத்த தேசமும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரசிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதில் பிரதமர் மோடி வெற்றி கண்டுள்ளார். உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் மக்களை காப்பாற்றிய பெருமை மோடிக்கு சேரும். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு வழங்க 8 லட்சம் டன் உணவு தானியங்களை பிரதமர் வழங்கினார். இதன் மதிப்பு ரூ.2,351 கோடி ஆகும்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி உதவி தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துள்ளது. மோடியின் திறமையான தலைமையில் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.

கர்நாடகத்தில் எனது அரசு கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1,610 கோடி தொகுப்பை அறிவித்தது. ஆஷா ஊழியர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படுகிறது. ரூ.2,284 கோடி தொகுப்பு 3 கட்டமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, பிரதமர் மோடி உதவினார்.

கடந்த ஓராண்டில் கர்நாடகத்திற்கு ரூ.17 ஆயிரத்து 249 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் பிற திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரத்து 79 கோடி வழங்கப்பட்டு உள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,869 கோடி வழங்கப்பட்டது. கலபுரகி, சிவமொக்கா விமான நிலையங்கள் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய அரசு உதவி வழங்கியுள்ளது.

புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.18 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கியுள்ளது. வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் அனைத்து ரெயில் பாதையும் மின்மயம் மற்றும் இரட்டை பாதை அமைக்க மத்திய அரசு உதவி செய்ய உள்ளது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story