75 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி கடற்கரை சாலை திறப்பு


75 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி கடற்கரை சாலை திறப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 10:45 PM GMT (Updated: 1 Jun 2020 10:45 PM GMT)

புதுச்சேரி கடற்கரை சாலை 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் நேற்று காலை உற்சாகத்துடன் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் புதுவை கடற்கரை சாலை மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு அறிவித்தது.

அதை பின்பற்றி புதுவையிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி புதுவை கடற்கரை சாலை, பூங்காக்களை திறக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை கடற்கரை சாலை திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 75 நாட்களுக்கு பிறகு கடற்கரை சாலையில் ஏராளமானோர் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோரும் நேற்று காலை நடைபயிற்சி செய்தனர். அதே நேரத்தில் பிற நாட்களில் பகல் நேரத்தில் கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

ஆனால் நேற்று வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்திவிட்டு கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள்.

ஆனால் அறிவிக்கப்பட்டது போல் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் நேற்று காலை முதல் திறக்கப்படாமல் மூடி இருந்தன. பின்னர் மாலை 5 மணிக்கு அவை திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story