தஞ்சை அருகே ரத்த காயங்களுடன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


தஞ்சை அருகே ரத்த காயங்களுடன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Jun 2020 10:50 PM GMT (Updated: 2020-06-02T04:20:06+05:30)

தஞ்சை அருகே, ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டார். அந்த பெண்ணை மீட்ட போலீசார், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளப்பெரம்பூர், 

தஞ்சை அருகே, ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டார். அந்த பெண்ணை மீட்ட போலீசார், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்த காயங்களுடன் கிடந்த பெண்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ரத்த காயங்களுடன் வடநாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செங்கிப்பட்டி போலீசார் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

காரில் இருந்து வீசப்பட்டார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்த பெண், பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கிருந்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு, வீட்டு வேலைக்காக ஒரு நபர் அழைத்து வந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்த்து விட்டுள்ளார்.

அந்த வீட்டில் அந்த பெண் வேலை செய்தபோது வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் அந்த பெண்ணை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி உள்ளனர், பல்வேறு விதத்திலும் அந்த பெண்ணை கொடுமை செய்து வந்த அவர்கள், நேற்று மதியம் அந்த பெண்ணை அடித்து உதைத்து ஒரு காரில் ஏற்றி செங்கிப்பட்டி அருகே பூதலூர் பிரிவு சாலை அருகே வீசி விட்டு சென்று உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் அங்கிருந்து நடந்து அருகில் உள்ள செங்கிப்பட்டிக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அந்த பெண் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் யார்? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story