ஏழைகளை வாழ வைக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்; இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாலிபர் உருக்கம்


ஏழைகளை வாழ வைக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்; இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாலிபர் உருக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2020 10:57 PM GMT (Updated: 2020-06-02T04:27:20+05:30)

ஆயுஷ்மான் பாரத் திட்டம் இல்லாவிட்டால் உயிர்பிழைத்திருக்க மாட்டேன் என இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாலிபர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

பிரதமர் மோடி நேற்று முன்தினம் மனதின் குரல் (மன்கீ பாரத்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது புதுவை முத்தரையர் பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்தின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவரது பெயர் ஜீவா (வயது27). இவரது தாயார் அமிர்தவல்லி மேற்கொண்ட முயற்சியால் ஜீவாவுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் சிகிச்சை பெற்றது குறித்து ஜீவா உருக்கமாக கூறியதாவது:-

நான் முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் வீதியில் எனது தாய், தம்பியுடன் வசித்து வருகிறேன். எனது தந்தை கிருஷ்ணன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனது தாய் அமிர்தவல்லி தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து எங்களை பராமரித்து வருகிறார். நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் வவுச்சர் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது நானும் பணியினை இழந்தேன்.

எனக்கு 12 வயது முதலே இதய நோய் இருந்தது. இதனால் அடிக்கடி மயக்கம், இதயத்தில் வலி ஏற்படும். அரசு ஆஸ்பத்திரியில் சோதித்தபோது இதய வால்வு பிரச்சினை இருந்ததாகவும், அதை சரிசெய்ய வேண்டுமென்றால் அதிக செலவு ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் செய்வதறியாமல் தவித்து வந்தோம்.

அப்போதுதான் ஏழைகளுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி தெரியவந்தது. அதில் நான் சேர்ந்தேன். புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்னையில் இருந்து வந்திருந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனக்கு இதய வால்வு அறுவை சிகிச்சை செய்தார்கள். இதனால் தான் நான் உயிர் பிழைத்தேன்.

இந்த அறுவை சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் செய்வதென்றால் ரூ.4½ லட்சம் செலவாகும். ஆனால் தற்போது அதற்கு ரூ.1.20 லட்சம் செலவானதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கான பணம் ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டது.

தற்போது பிரதமர் மோடி பேசுவதை நேரடியாக பாருங்கள் என்று சுகாதாரத் துறையில் இருந்து தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. அதன்பின் யூ-டியூபில் பார்த்தேன். இந்த திட்டம் என்னைப்போன்ற ஏழைகளை வாழ வைக்கும் திட்டம். இதற்காக பிரதமர் மோடிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Next Story