புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய தற்காலிக கடைகள் இடமாற்றம்


புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய தற்காலிக கடைகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 1 Jun 2020 11:27 PM GMT (Updated: 1 Jun 2020 11:27 PM GMT)

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய தற்காலிக மார்க்கெட் நாளை முதல் பெரிய மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான புதுவை பெரிய மார்க்கெட் புதிய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பழக்கடைகள் நேரு வீதி நடைபாதைக்கு மாற்றப்பட்டது.

கடந்த மாதம் 3-ந் தேதி ஊரடங்கு தளர்வுக்கு பின் பழக்கடைகள் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன. ஆனால் காய்கறி கடைகள் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்திலேயே செயல்பட்டன. அங்கு கடைக்காரர்களுக்கு வசதியாக நிழல் பந்தல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்புக்கட்டைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஏற்கனவே புதுச்சேரியில் ஒருசில அரசு பஸ்கள் மட்டும் பஸ் நிலையத்துக்கு வெளியில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து பஸ்களையும் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு பஸ்களும், புதுச்சேரிக்கு வர உள்ளன. இதற்கு வசதியாக பஸ் நிலையத்தை தயார்ப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே இங்கிருந்து தற்காலிகமாக மாற்ற அரசு முடிவு செய்தது.

இதையடுத்து காய்கறிக்கடைக்காரர்களுடன் துணை கலெக்டர் சுதாகர், நகராட்சி ஆணையர் சிவகுமார், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெரிய மார்க்கெட் பகுதிக்கு மீண்டும் காய்கறி மார்க்கெட்டை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இதை வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதையடுத்து நாளை (புதன்கிழமை) முதல் பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடைகள் வழக்கம் போல் இயங்க உள்ளன.


Next Story