மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை


மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
x
தினத்தந்தி 1 Jun 2020 11:45 PM GMT (Updated: 1 Jun 2020 11:45 PM GMT)

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தும் நேற்று மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வர வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரையும், மாகி பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் மீன்பிடி தடை காலம் ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுவை, காரைக் கால் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதலே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மீன்பிடி தடைக் காலத்தை மே 31-ந் தேதியாக குறைத்தது.

கடந்த 2 மாதங்களாக தொழிலுக்கு செல்லாத நிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீர் செய்யும் பணியை துரிதப்படுத்தினர். இந்த நிலையில் தடைக்காலம் நிறைவடைந்ததையொட்டி நேற்று முதல் விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வர மாட்டார்கள் என்பதாலும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை இருப்பதாலும் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருவதால் என்ன பயன்? என்ற கேள்வி மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஜூன் மாத கடைசி வரை மீன்பிடி தடைக்காலம் இருப்பதாக கருதி பல மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்காமல் இருந்ததாலும் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்று மற்றொரு காரணம் கூறப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற 5-ந்தேதி முதல் புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மீன்பிடி தொழிலில் ஈடுபடும் படகுகள் எத்தனை?

புதுச்சேரி, காரைக்காலிலும் கேரளா அருகே மாகி, ஆந்திரா அருகே ஏனாம் ஆகிய பிராந்தியங்களிலும் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை விசைப்படகுகள் 170, காரைக்காலில் 221, மாகியில் 21, ஏனாமில் 70 என உள்ளன. இதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்திய 2,400 படகுகளும், 1,700 பைபர் கட்டுமரங்களும் உள்ளன. இந்த தொழிலில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story