ஸ்ரீபெரும்புதூர் அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்


ஸ்ரீபெரும்புதூர் அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Jun 2020 11:51 PM GMT (Updated: 1 Jun 2020 11:51 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் குளிக்கின்றனர். இதனால் கொரானா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்,

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மக்கள் பொழுதை கழிக்க வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு அருகே உள்ள ஏரி, குளங்களுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், பொழுது போக்கவும் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் கூட்டம் கூட்டமாக வந்து கிருஷ்ணா கால்வாயில் குளித்து மகிழ்கின்றனர். சிலர் அதில் மீன் பிடிக்கின்றனர். யாரும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலேயே கும்பல் கும்பலாக குளித்து மகிழ்கின்றனர்.

இதனால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. போலீசாரும், சுகாதாரத்துறையினரும் இதை கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story