போடியில் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்


போடியில் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள்   துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Jun 2020 6:44 AM IST (Updated: 2 Jun 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

போடியில் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட் களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

போடி(மீனாட்சிபுரம்),

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு பணியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. சார்பில் 4,362 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.அதுபோல், மாவட்டம் முழுவதும் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரம் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி போடியில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் தனது சொந்த செலவில் போடி அரசு மருத்துவமனைக்கு வாங்கி கொடுத்த 2 குளிர்சாதன பெட்டிகளையும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், கைலாசநாதர் மலைக்கோவில் அன்பர் பணிக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், போடி நகர செயலாளர் பழனிராஜ், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story