பீகார் மாநில தொழிலாளர்கள் 5 பஸ்களில் தூத்துக்குடி பயணம் ரெயிலில் சொந்த ஊர் சென்றனர்


பீகார் மாநில தொழிலாளர்கள் 5 பஸ்களில் தூத்துக்குடி பயணம் ரெயிலில் சொந்த ஊர் சென்றனர்
x
தினத்தந்தி 2 Jun 2020 7:03 AM IST (Updated: 2 Jun 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 183 பேர் 5 பஸ்களில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து தனி ரெயிலில் சொந்த ஊர் சென்றனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 183 பேர் 5 பஸ்களில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து தனி ரெயிலில் சொந்த ஊர் சென்றனர்.

பீகார் மாநில தொழிலாளர்கள்

குமரி மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு பீகாருக்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்கிறார்கள்.

183 பேர்

இதையொட்டி பீகார் மாநிலத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தவர்களில் நாகர்கோவில் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட 167 தொழிலாளர்களும், பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட 16 பேரும் ஆக மொத்தம் 183 பேர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பஸ்களில் மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் வழியனுப்பி வைத்தார். சொந்த ஊருக்குச் செல்லும் மகிழ்ச்சியில் பீகார் மாநில தொழிலாளர்கள் முகமலர்ச்சியோடு கைகளை அசைத்தபடி சென்றனர்.

காங்கிரஸ் உதவி

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய தலைவரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான வக்கீல் ராபர்ட் புரூஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், நடேசன், செல்வராஜ் உள்ளிட்டோர் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 183 பேருக்கும் பிரட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Next Story