மது குடிக்க பணம் கொடுக்காததால் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து


மது குடிக்க பணம் கொடுக்காததால் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 2 Jun 2020 1:48 AM GMT (Updated: 2020-06-02T07:18:37+05:30)

பர்கூர் அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மரிமானப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). அதே ஊரை சேர்ந்தவர் சக்திவேல்(20). கூலி தொழிலாளிகள். இருவரும் உறவினர்கள். சக்திவேல் நேற்று முன்தினம் மது குடிக்க பிரகாசிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷ் வயிற்றில் குத்தினார். இதை பார்த்த அவரது தம்பி அருள்(27) தடுக்க வந்தார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. அத்துடன் இவர்களுடன் இருந்த பிரபு(23) என்பவரையும் சக்திவேல் கத்தியால் கையில் குத்தினார். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story