விழுப்புரம்-செங்கோட்டை வழித்தடத்தில் சரக்கு, பயணிகள் ரெயில் இயக்கப்பட வேண்டும் மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்


விழுப்புரம்-செங்கோட்டை வழித்தடத்தில்  சரக்கு, பயணிகள் ரெயில் இயக்கப்பட வேண்டும்  மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jun 2020 3:06 AM GMT (Updated: 2 Jun 2020 3:06 AM GMT)

விழுப்புரம்-செங்கோட்டை வழித்தடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர், 

மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தொகுதியில் உள்ள சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பல்வேறு சிறு-குறு தொழில்கள் ஊரடங்கு காலத்திலும் அரசு விதிமுறைகள் படி இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள செங்கோட்டை ரெயில்வே வழித்தடத்தில் ரெயில்கள்இயக்கப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தொடக்ககாலத்தில் இருந்தே சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மதுரை-செங்கோட்டை ரெயில் பாதை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு விட்டது.

தேவை

எனவே தென்மாவட்ட சிறு,குறு தொழில்கள் காப்பாற்றப்பட மதுரை-செங்கோட்டை ரெயில்வே வழித்தடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் இயக்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவைஆகிறது. இந்தவழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 16102, 16182, 12662, 06015, 06036, 56732 ,56234, 56736 ஆகிய எண்கள் உடைய ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

மேலும் செங்கோட்டை- மதுரை-விழுப்புரம் மற்றும் செங்கோட்டை, தென்காசி வழியாக நெல்லைக்கும், செங்கோட்டை, தென்காசி, நெல்லை, மணியாச்சி, தூத்துக்குடி வரையிலான ரெயிலும் இயக்கப்பட வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் இயக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழித்தடத்தில் ஒரு சரக்கு ரெயில் கூட இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இழந்த வாழ்வாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு இப்பகுதியில் மீண்டும் சரக்கு ரெயில்களை இயக்க வேண்டும். எனது தொகுதி மக்களின் நலன் கருதி தாங்கள் உடனடியாக இதற்கான ஏற்பாடுகளுக்கு உத்தரவிட வேண்டும். இது குறித்து சிவகாசி தொழில் அமைப்புகளின் சார்பில் எனக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையிலேயே நான் தங்களிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Next Story