ராமேசுவரம் கோவிலில் முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் நடந்த ராமலிங்க பிரதிஷ்டை விழா


ராமேசுவரம் கோவிலில்  முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் நடந்த ராமலிங்க பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 2 Jun 2020 9:20 AM IST (Updated: 2 Jun 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்தது.

ராமேசுவரம், 

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முதல் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. திருவிழாவின் 3-வது நாளான நேற்று கோவிலுக்குள்ளேயே ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. கோவிலின் விசுவநாதர் சன்னதி எதிரே பெரிய கலசத்தில் புனித நீர் வைக்கப்பட்டு ருத்ராபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து கருவறையில் உள்ள ராமநாதசாமிக்கு பால், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்ட 12 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று கலசத்தில் உள்ள புனித நீரால் மகாஅபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் குருக்கள் ஒருவர் சாமி சிலையுடன் 3 முறை சாமிசன்னதி பிரகாரத்தை வலம் வந்து கருவறையில் உள்ள ராமநாதசாமி அருகே சிலையை வைத்தார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

அனுமதி இல்லை

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் கோவிலின் உதவி ஆணையர் ஜெயா, சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜைகளை கணேஷ், சிவமணி, ஸ்ரீராம் குருக்கள் ஆகியோர் செய்தனர். ஊரடங்கால் முதல் முறையாக ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடந்தது.

Next Story