சேலம் மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி


சேலம் மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2020 3:50 AM GMT (Updated: 2 Jun 2020 3:50 AM GMT)

சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சேலம்,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 5-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், 5-வது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி சேலம் மாவட்டத்தில் 68 நாட்கள் ஊரடங்கிற்கு பின்பு நேற்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம் ஜான்சன்பேட்டை, மணியனூர், மெய்யனூர், மணக்காடு, எருமாபாளையம் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து 50 சதவீத பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதையொட்டி அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து குறைவான பயணிகளுடன் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றது. அதாவது, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக பஸ்களில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பஸ் பயணிகளுக்கு சானிடைசர் வழங்கிய பிறகே டிக்கெட் வழங்கப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. அதேபோல், சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும், சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, வலசையூர், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் ஏறினர். அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அனைவரும் முககவசம் மற்றும் கையுறை அணிந்து பணிக்கு வந்திருந்ததை காணமுடிந்தது.

பஸ்களில் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பஸ் கட்டணம் எதுவும் உயர்த்தப்படாமல் பழைய கட்டணம் மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது. 68 நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் கூறியதாவது:-

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 50 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதாவது, சேலத்தில் 318 நகர பஸ்களும், 199 புறநகர் பஸ்களும், தர்மபுரியில் 274 நகர பஸ்களும், 130 புறநகர் பஸ்களும் என மொத்தம் 921 பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கு முன்பு சானிடைசர் வழங்கப்படும். பஸ்சில் பின்வாசல் வழியாக ஏறி, முன்படிக்கட்டு வழியாக இறங்க வேண்டும். ஒவ்வொரு நடையின்போதும் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பஸ் நிலையங்களில் நோய் தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை அரசு பஸ்கள் வந்ததும் பயணிகள் முண்டியடித்து ஏறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை கீழே இறக்கி விட்ட கண்டக்டர்கள், பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்களில் ஏற அனுமதித்தனர். அதன்பிறகு கூட்டம் குறைந்தது. ஆத்தூரில் இருந்து ராசிபுரம், ஈரோடு, சேலம், கோவை ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 25 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story