தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2020 4:50 AM GMT (Updated: 2 Jun 2020 4:50 AM GMT)

தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை, 

தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை பற்றி விமர்சனம் செய்ததாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்தும், அவரை கண்டிக்க தவறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் புதுக்கோட்டையில் அய்யனார்புரத்தில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் பொன்னமராவதி அண்ணாநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக்கோரியும், அவரை கண்டிக்காத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் அண்ணாநகரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் பதாகைகளை ஏந்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அன்னவாசல், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி

அன்னவாசலில் நகர அ.தி.மு.க. செயலாளர் அப்துல்அலி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலினத்து பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராகவும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் எழுதப்பட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு, முத்தமிழ்செல்வன், சாலைமதுரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை இந்திரா நகரில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்.எஸ்.பாரதி, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் ராமநாதன், மாவட்ட பிரதிநிதி கவிதா உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கியில் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், மு.க.ஸ்டாலினை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் சோதனைச்சாவடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்.

Next Story