புதுக்கோட்டையில்கொ ரோனாவுக்கு பலியானவரின் மகனுக்கு தொற்று தந்தையின் இறுதிச்சடங்கை முடித்ததும் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு பலியானவரின் மகனுக்கு தொற்று உறுதியானது. தந்தையின் இறுதிச்சடங்கை முடித்ததும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு பலியானவரின் மகனுக்கு தொற்று உறுதியானது. தந்தையின் இறுதிச்சடங்கை முடித்ததும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதியவர் பலி
புதுக்கோட்டை வடக்கு 5-ம் வீதியை சேர்ந்த 65 வயதுடைய ஓய்வு பெற்ற நில அளவையர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் தகுந்த பாதுகாப்புடன் மயானத்தில் இரவில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் நில அளவையரின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவரது 23 வயதுடைய மகனுக்கு தொற்று இருப்பது, நேற்று முன்தினம் மாலை உறுதியானது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது மகன் மயானத்தில் இருந்தார். இருப்பினும் இறுதிச்சடங்கை முடித்த பின் அவரிடம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலியானவர் வசித்த பகுதியில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியில் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இதில் 19 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டிஸ்சார்ஜ்’ ஆனவர்களில் புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியை சேர்ந்தவரும் ஒருவர் ஆவார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story