குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரியை சிறை பிடித்த பொதுமக்கள்


குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க வந்த  அதிகாரியை சிறை பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Jun 2020 5:27 AM GMT (Updated: 2 Jun 2020 5:27 AM GMT)

அவினாசி அருகே குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

அவினாசி, 

அவினாசி ஒன்றியம் கருவலூரில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கருவலூர் பஸ் நிறுத்தம் அருகே ஆற்று குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. பொதுக் குழாய், சீரமைப்புப் பணிக்காக கடந்த 6 மாதம் முன்பு இந்த குழாய் அகற்றப்பட்டது. இதையடுத்து கருவலூர், கோவில்பாளையம் ரோட்டில் தற்காலிகமாக ஆற்று குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு அதில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு உள்ளதாக கூறிவடிகால் வாரியத்தினர் கடந்த 29-ந் தேதி குடிநீர் இணைப்பை துண்டிப்பதற்காக வந்திருந்தனர். இதையறிந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அவினாசி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அரிகரன் ஆகியோர்சம்பவ இடம் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலைமறியல் கைவிடப்பட்டது.

சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்றுமீண்டும் வடிகால் வாரியத்தினர் குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்தனர். இதையறிந்த ஊர் பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்தினரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த அவினாசி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், “ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளதாகவும் அதனால் இணைப்பு துண்டிப்பதாகவும்“ தெரிவித்தனர்.

இதற்கு பொதுமக்கள், குடிநீர் இணைப்பை துண்டித்தால் குடிநீர் இன்றி நாங்கள் மிகவும் அவதிப்பட நேரிடும். எனவே குடிநீர் இணைப்பை துண்டிக்க அனுமதிக்கமாட்டோம் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஊராட்சிஒன்றிய நிர்வாகத்துடன் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு செய்யலாம் அதுவரை பொதுக்குழாய் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் நிறுத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது. எனவே குடிநீர் வடிகால் வாரியத்தினர் இணைப்பை துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story