நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 3 Jun 2020 4:00 AM IST (Updated: 3 Jun 2020 12:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் ஓடத் தொடங்கின. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல்தான் பஸ்கள் இயக்கப்பட்டன.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு பயணிகள் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு எந்தவொரு தடங்கலும் இல்லை.

ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பஸ்களில் வந்த பயணிகளை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். அங்கு பயணிகளின் பெயர் விவரங்களை சேகரித்து, அவர்களை அறிஞர் அண்ணா கல்லூரிக்கு அழைத்து சென்று, கொரோனா பரிசோதனை நடத்தினர்.

இதனால் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்காக சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து காலையில் வேலைக்கு செல்வதற்காக வந்த அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாததால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

அப்போது சோதனைச்சாவடியில் இருந்த குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ராஜாமணியிடம் பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகள் கூறுகையில், ‘அரசு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று கூறியதால்தான் நாங்கள் பஸ்களில் புறப்பட்டு வந்தோம். கார், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களைக்கூட பெயர்களை மட்டும் பதிவு செய்து விட்டு அனுப்பி வைக்கிறீர்கள். எங்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை என்ற பெயரில், இப்படி மணிக்கணக்கில் காத்திருக்க சொல்கின்றீர்கள். எங்களால் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவில்லையே’ என்று ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் என்ன உத்தரவிட்டு உள்ளதோ, அதைத்தான் செய்கிறோம். எனவே அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்’ என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

நேற்று காலை முதல் பகல் வரை மட்டும் பஸ்சில் வந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே குமரி மாவட்டத்துக்கு பஸ்களில் வந்த பயணிகளில் பலர், தங்களது உறவினர்களை சோதனைச்சாவடிக்கு வரச்சொல்லி, அவர்களின் வாகனங்களில் ஏறி, கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்றனர். மேலும் சிலர் சோதனை சாவடியில் இருந்து கொரோனா பரிசோதனைக்கு செல்லாமல், அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்று, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் நாகர்கோவிலுக்கு செல்வதையும் காண முடிந்தது.

மேலும் பயணிகளை பரிசோதனைக்காக இறக்கி விட்டதும், அரசு பஸ்கள் ஆரல்வாய்மொழி பஸ் நிலையத்துக்குள் கொண்டு போய் நிறுத்தப்பட்டன. பயணிகள் பரிசோதனை முடிந்து வந்ததும், அவர்களை ஏற்றி கொண்டு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

Next Story