பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை வேளாண்மைத்துறை இயக்குனர் பேட்டி


பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை வேளாண்மைத்துறை இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2020 4:07 AM IST (Updated: 3 Jun 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை என வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

தஞ்சாவூர்,

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை என வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலக்கு நிர்ணயம்

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 35 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் முடிந்துள்ளது.

குறுவை தொகுப்பு திட்டம்

அதேபோல் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யவும், அதன்மூலம் 5 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான எந்திரங்கள் வேளாண்மை பொறியியல்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் அனைத்தும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் பருத்தி சாகுபடி பரப்பளவு நடப்பாண்டு அதிகரித்துள்ளது. இன்னும் இரு வாரங்களில் பருத்தி கொள்முதல் நடைபற உள்ளது. இந்திய பருத்தி கழகத்தினரோடு நாங்கள் பேசியுள்ளோம்.

கொள்முதல்

இந்த ஆண்டு பருத்தி கொள்முதல் செய்ய டெல்டாவில் அதிகம் வரத்து உள்ள பகுதிகளில் இந்திய பருத்தி கழகம் தனது மையத்தை தொடங்க உள்ளது. நேரிடையாக கிலோ 54 ரூபாய் 55 பைசாவுக்கு கொள்முதல் செய்ய உள்ளனர். இந்திய பருத்தி கழகம் நேரிடையாக கொள்முதல் செய்வதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பருத்தி வரத்தில் பாதிப்பு இருக்காது.

வெட்டுக்கிளிகள்

பாலைவன வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை. 10 கோடி, 20 கோடி என கூட்டம், கூட்டமாக வந்து வட மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பாலைவன வெட்டுக்கிளிகளின் நகர்வுகளை கண்காணிக்க மத்திய அரசு ஜோத்பூரில் எச்சரிக்கை மையத்தை தொடங்கியுள்ளது. இதனுடன் நாங்கள் தினமும் தொடர்பு கொண்டு வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து கேட்டு வருகிறோம்.

தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு இல்லை. காற்றின் திசை கிழக்கு நோக்கி இருப்பதால் வெட்டுக்கிளிகள் பஞ்சாப், ஒடிசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. விந்திய மலைத்தொடர், மேற்கு தொடர்ச்சி மலைகளும் தமிழகத்துக்கு அரணாக இருக்கிறது. 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள் உள்ளன. இதனால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்துபவை.

கண்காணிப்பு குழுக்கள்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள் அனைத்தும் நன்மை தருபவை தான். வெட்டுக்கிளிகள் தொடர்பாக விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதியில் வெட்டுக்கிளிகள் இருந்தால் அதை படம் எடுத்து உழவன் செயலியில் பதிவு செய்தால் உரிய ஆலோசனை வழங்கப்படும்.

முன்னெச்சரிக்கையாக பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதை கண்காணிக்க மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story